உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதல்வருக்கு அனுப்பிய மனுக்களுக்கு பொறுப்பற்ற பதில்! அதிகாரிகள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பு

முதல்வருக்கு அனுப்பிய மனுக்களுக்கு பொறுப்பற்ற பதில்! அதிகாரிகள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பு

திருப்பூர் : முதல்வரின் முகவரிக்கு அனுப்பும் மனுக்களுக்கும், துறை சார்ந்த மாவட்ட அதிகாரிகள் பொறுப்பின்றி பதிலளிப்பது, புகார் அளிக்கும் மக்களை கவலை அடையச் செய்கிறது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கள் கிழமை, கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுவருகிறது. அனைத்து அரசு துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.அதிகாரிகளிடம் அலைந்தும் பயனில்லாதநிலையில், கலெக்டரிடம் நேரடியாக மனு அளித்தால் நிச்சயம் விரைந்து தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளிக்கின்றனர். வீட்டு மனை பட்டா கேட்டல், பட்டாவில் சேர்க்கப்பட்ட சம்பந்தமில்லாத நபரை நீக்குதல், அடிப்படை வசதிகள், முதியோர் உதவித்தொகை, அரசு நிலம் ஆக்கிரமிப்பு உள்பட பல்வேறு பிரச்னைகளை குறிப்பிட்டு, குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்களும், தன்னார்வலர்களும் மனு அளிக்கின்றனர்.

வாரம் 600 மனுக்கள் வரை...

வாரந்தோறும் நடத்தப்படும் முகாமில், பொதுமக்களிடமிருந்து 400 முதல் அதிகபட்சம் 600 மனுக்கள் வரை பெறப்படுகிறது. ஆனால், குறைகேட்பு கூட்டத்தில் அளிக்கப்படும் பெரும்பாலான மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய காலத்துக்குள் நடவடிக்கை எடுப்பதில்லை.மாவட்ட அளவிலான முகாமில் மனு அளித்து பயனில்லாதநிலையில், மக்கள் பலரும் https://cmhelpline.tnega.org/portal/ta/home என்ற போர்ட்டலில், முதல்வரின் முகவரிக்கு ஆன்லைனில் புகார் அளிக்கின்றனர். முதல்வரின் கவனத்துக்கு செல்லும் என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிச்சயம் தங்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பர் என, மக்கள் நம்புகின்றனர்.

முக்கியத்துவம்அளிப்பதில்லை

கடந்த 8ம் தேதி நிலவரப்படி, திருப்பூர் மாவட்டத்திலிருந்து 5,246 மனுக்கள் முதல்வரின் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளன. 15 நாட்களான நிலையில் 3,261 மனுக்கள்; ஒரு மாதம் வரையிலான 1887 மனுக்கள்; ஒரு மாதத்தை கடந்து 3 மாதம் வரையிலான 29 மனுக்கள்; மூன்று மாதத்தை கடந்து ஆறு மாதம் வரையிலான 51 மனுக்கள்; ஆறு மாதத்துக்கு மேலாகியும் தீர்வு காணப்படாத நிலையில் 18 மனுக்கள் உள்ளன.முதல்வரின் முகவரிக்கு அனுப்பப்படும் மனுக்களுக்கும், மாவட்ட அதிகாரிகள் முக்கியத்துவம் அளிப்பதாக தெரியவில்லை. அளிக்கப்பட்ட மனுவுக்கு, சம்பந்தமே இல்லாத பதிலளிப்பது; 'நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என சமாளிப்பு பதிலளிப்பது மட்டுமின்றி, 'இது எங்கள் துறை சார்ந்தது அல்ல' என பதிலளித்து, 'ரூட்'டையே மாற்றிவிட்டு மனுதாரரை குழப்பிவிடுகின்றனர்.முதல்வரின் முகவரிக்கு அனுப்பும் மனுக்களுக்கும், அதிகாரிகள் பொறுப்பின்றி பதிலளிப்பது, மக்களுக்கு மிகுந்த மன வேதனையையும், நம்பிக்கையின்மையையுமே ஏற்படுத்துகிறது.திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகள், ஆர்.டி.இ.,ல் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக சரவணன் என்பவர் முதல்வரின் முகவரிக்கு புகார் அளித்தார்.அவருக்கு கல்வித்துறை அனுப்பிய பதிலை பார்த்தாலே, அதிகாரிகளின் பொறுப்புணர்வு தெரிந்துவிடும். 'பல்லடம் மற்றும் திருப்பூரில் உள்ள தங்கள் பள்ளியில் பயிலும் பகுதிநேர கராத்தே ஆசிரியர் சரவணன், சம்பளம் வழங்கப்படவில்லை என புகார் அளித்துள்ளார். அவருக்கு சம்பள நிலுவையை உடனடியாக வழங்கி, அறிக்கையை இந்த அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கவேண்டும்' என, ஒரு தனியார் பள்ளி தாளாளருக்கு அனுப்பிய கடிதத்தை, ஆர்.டி.இ., தொடர்பாக சரவணன் அனுப்பிய மனுவுக்கான பதிலாக அனுப்பி, கணக்கை முடித்துவிட்டனர்.திருப்பூரில், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கித்தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், விழிப்புணர்வு பலகை வைக்க கோரியும் முதல்வரின் முகவரிக்கு புகார் அளிக்கப்பட்டது.''மாவட்ட குடிசை மாற்றுவாரிய அதிகாரிகளோ, ஏ.எச்.பி., திட்டத்தில் வீடு கேட்டு மனு அளித்துள்ளீர்கள். இந்த திட்டத்தில் காலியிடம் இல்லை. ஏதேனும் காலியிடம் வந்தால், உங்களை தொடர்புகொள்வோம். உங்கள் மனு காத்திருப்பு பட்டியலில் உள்ளது'' என, பதிலனுப்பியுள்ளனர்.திருப்பூர் மாவட்ட கூட்டுறவு மற்றும் வழங்கல் துறைகளில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருக்கும் அதிகாரிகள், அலுவலர்களை பணியிட மாறுதல் செய்யக்கோரி மனு அனுப்பப்பட்டது. அம்மனுவுக்கு, திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளின் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவுப்பொருள் இருப்பு விவரத்தை பதிலாக அளித்துள்ளனர், கூட்டுறவு அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சாமிநாதன்
ஜூலை 12, 2024 11:43

பொறுப்பற்றவர் தானே மனுவை கொடுங்க, விசாரித்து நடவடிக்கை எடுக்குறேன்னாரு. அவரிடமே மனுவைக்.கொடுங்க.


VENKATASUBRAMANIAN
ஜூலை 12, 2024 08:43

இன்னுமா அதிகாரிகளை நம்புகிறீர்கள். திமுக ஆட்சியில் வாய்ப்பே இல்லை. பணம் இருந்தால் மட்டுமே நடக்கும். இதுதான் திராவிட மாடல்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை