| ADDED : ஜன 26, 2024 11:54 PM
திருப்பூர்: திருப்பூர் கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான இடத்தில் அரசு உத்தரவையும் பொருட்படுத்தாமல் கடைகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது பல தரப்பையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.திருப்பூர், பி.என்., ரோட்டில் திருப்பூர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்துக்குச் சொந்தமான இடம் உள்ளது. இதில் ஒரு பகுதியில் வேளாண் விளை பொருள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. அதே வளாகத்தில் சத்தி மலர் சாகுபடி விவசாயிகள் சிலர் கடை வைக்க அனுமதி கேட்டனர். அதே சமயம் சில பூ வியாபாரிகள் அங்கு விவசாயிகள் பெயரில் கடைகள் அமைக்க, ஆளும் கட்சியினரின் 'ஆசியுடன்' களம் இறங்கியது தெரிந்தது.இதனால், மாநகராட்சி பூ மார்க்கெட் குத்தகைதாரர் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் அவசர மனுவாக விசாரிக்க ஒரு மனு தாக்கல் செய்தது. 24ம் தேதி விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆதிகேசவலு, மனுதாரர் தரப்பு ஆவணங்களை ஆய்வு செய்தார். அதன்பின், அரசு தரப்புக்கு, பிப்., 20ம் தேதிக்குள் தங்கள் நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.இதனால், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பணிகளை நிறுத்த அறிவுறுத்தினர். இதனால், நேற்று முன்தினம் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் கட்டுமானப் பணி துவங்கியது. இது குறித்து விளக்கம் பெற, கலெக்டரை தொடர்பு கொண்ட போது அவர் நமது போன் அழைப்பை ஏற்கவில்லை. கூட்டுறவு துறை அலுவலர்கள் மொபைல் போன்கள் 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.