sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 11, 2026 ,பங்குனி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

10

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 1188

பாஜ எம்எல்ஏ வானதி மருத்துவமனையில் அட்மிட்

ஷார்ட்ஸ்

17 hour(s) ago

மேஷம்அசுவினிநேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ புண்ணியாதிபதி சூரியன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் குழப்பம் எல்லாம் போகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். விரய ஸ்தானத்தில் சனி பகவானும், மே 10 வரை செவ்வாயும் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல் அதிக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். உடல் நிலையில் ஒன்று போய் ஒன்று என்று ஏதாகிலும் சங்கடங்கள் வந்துபோகும். மருத்துவ செலவு கூடும். வியாபாரிகளுக்கு பயணங்கள் அதிகரிக்கும், கொள்முதல் செய்வதற்காக பணம் எடுத்துச்செல்பவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேச்சு வார்த்தைகள் வேண்டாம். சிலர் வேலைக்காக வெளிநாடு செல்வீர்கள். வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் என்று வாங்குவதால் கையிருப்பு கரையும். அதே நேரத்தில் குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச்செல்வீர்கள். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லை என்ற வருத்தம் மேலோங்கும். மாணவர்களுக்கு விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: மே 3.அதிர்ஷ்ட நாள்: ஏப். 16, 18, 25, 27. மே 7, 9.பரிகாரம் கற்பக விநாயகரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.பரணிஎடுத்த வேலையை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் சிறப்பான மாதமாகும். ஏப். 20 வரை ஜென்ம ராசிக்குள்ளும், அதன்பிறகு தன குடும்ப ஸ்தானத்தில் ஆட்சியாகவும் சஞ்சரிக்கும் சுக்கிரன் பணப்புழக்கத்தை அதிகரிப்பார். பொருளாதார நிலையை உயர்த்துவார், தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலையை ஏற்படுத்துவார். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் 7,9,11 ம் இடங்களுக்கு கிடைப்பதால் திருமண வயதினருக்கு வரன் வரும். சண்டை சச்சரவுகளால் பிரிந்திருந்த தம்பதிகள் பெரியோர் அறிவுரையால் மீண்டும் ஒன்றிணையும் நிலை உருவாகும். கூட்டுத்தொழில் முன்னேற்றமடையும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர்கள். புதிய வீட்டில் பால் காய்ச்சி குடியேறக்கூடிய நிலையும் சிலருக்கு உண்டாகும். விஐபிகள் ஆதரவால் இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். விரய ஸ்தானத்தில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனமாக இருப்பது நன்மையாகும். வேலையின் காரணமாக வெளியூர் பயணமும் அலைச்சலும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் நெருக்கடி அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நன்மையளிக்கும். விவசாயிகளுக்கு செலவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர் கல்வி கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: மே 4.அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 18, 24, 27. மே 6, 9.பரிகாரம்திருச்செந்துார் முருகனை வழிபட உங்கள் முயற்சி வெற்றியாகும்.கார்த்திகை 1 ம் பாதம்உச்சத்தை எட்டிவிடவேண்டும் என வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிக்குள் மாதம் முழுவதும் சூரியன் உச்சமாக சஞ்சரிப்பதால் உங்களுக்குள் புதுப்புது திட்டங்கள் உருவாகும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தவர்கள் வேலையை விட்டுவிட்டு சுயமாக தொழில் தொடங்க முயற்சிப்பீர்கள். சிலர் வேறு வேலைக்கு முயற்சிப்பீர்கள். சிலர் வெளிநாடு செல்லும் முடிவிற்கும் வருவீர்கள். இந்த நேரத்தில் விரய ஸ்தானத்தில் சனியும், மே 10 வரை ராசிநாதன் செவ்வாயும் சஞ்சரிப்பதால் செலவும், அலைச்சலும் அதிகரிக்கும். என்றாலும் லாப ஸ்தானத்தில் குருப்பார்வையுடன் யோகக்காரகன் ராகு சஞ்சரிப்பதால் வரவேண்டிய பணம் வரும். எடுக்கும் வேலைகளில் லாபம் கூடுதலாகும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும். திருமண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டவர்களுக்கும், வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்புகள் வரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். பெண்களுக்கு குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும். சிலருக்கு புதிய பொறுப்பு வரும். அரசியல் வாதிகள் தங்களுடைய செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அதிகமாக உழைப்பீர்கள். அதனால் சிலருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். வயதானவர்கள் முடிந்தவரை அலைச்சலை குறைத்துக்கொள்வது நன்மையாகும். மாணவர்களுக்கு விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: மே 5அதிர்ஷ்ட நாள்: ஏப். 18, 19, 27,28. மே 1, 9, 10.பரிகாரம்அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான மாதமாகும். உங்களின் சுக ஸ்தானாதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு வெளிப்படும். அரசியல்வாதிகள் தங்கள் வேலைகளில் உறுதியாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் உங்களைக் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். சிலருக்கு வேலையின் காரணமாக குடும்பத்தினருடன் ஒரு இடைவெளி ஏற்படும். சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் தாயாரின் உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும். தாய்வழி உறவுகளுடன் விரோதம் ஏற்படும். லாப ஸ்தானம் பலமடைந்திருப்பதால் வியாபாரிகளுக்கு முதலீட்டிற்கேற்ற வருமானம் கிடைக்கும். சிறு வியாபாரிகளின் வாழ்வில் வளம் உண்டாகும். மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரித்தாலும், ஏப். 20 முதல் ராசிக்குள் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து செயல்படுவீர்கள். பொன் பொருள், ஆடை ஆபரணம், புதிய வாகனம் என்று சிலர் வாங்குவீர்கள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். நீண்டநாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மாணவர்களுக்கு மேற்கல்விக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: மே 5, 6.அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 19, 24, 28. மே 1, 10.பரிகாரம்: ஐயாறப்பரை வழிபட வாழ்வில். வளம் உண்டாகும்.ரோகிணிபலவற்றில் கவனத்தை செலுத்தி வேலைப்பளுவிற்கு ஆளாகிவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் முன்னேற்றமான மாதமாகும். தொழில் காரகனான சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் இருந்த பிரச்னைகள் எல்லாம் விலக ஆரம்பிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். முதலீட்டிற்கேற்ப ஆதாயம் இல்லை என்று வருத்தப்பட்டு வந்த நிலைமாறும். முடங்கிக்கிடந்த தொழில்கள் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலையில் ஏற்பட்ட தொந்தரவுகள் விலகும். இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும். வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்ல பலமுறை முயற்சி செய்தும் போகமுடியவில்லை என்ற நிலை மாறும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலைக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்துக்கொண்டிருந்த நிலை நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சி மேற்கொண்டு வருபவர்களுக்கு அரசின் அனுமதிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். மே 10 வரை செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், புதிய இடம், நிலம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த வரவு வரும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். சூரியன் விரய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால் செலவுகள் அதிகரிக்கும். அது உங்கள் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்குமானதாக இருக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும், எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும், ஆரோக்கியம் மேம்படும். மாணவர்களுக்கு எதிர்காலத்தின் மீது அக்கறை உண்டாகும். உயர்கல்வி கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: மே 6, 7.அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 20, 24, 29. மே 2, 11.பரிகாரம்: வீர ராகவப் பெருமாளை வழிபட வாழ்வில் வெற்றி உண்டாகும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்எந்த நிலையிலும் தைரியத்தை இழக்காத உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். தைரிய வீரியக்காரகனான செவ்வாய் மே 10 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பம், தொழில் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். சிலருக்கு புதிய சொத்துகள் சேரும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலையை உங்களுக்கு வழங்குவார். 6, 8, 10 ம் இடங்களைப் பார்க்கும் குருவால் மறைந்திருந்த உங்கள் செல்வாக்கு வெளிப்படும். நேற்றுவரை எதற்காகவோ பயந்து பயந்து வாழ்ந்துவந்த உங்கள் நிலையில் இனி எந்த ஒரு பயமும் இருக்காது. நினைத்ததை சாதிக்கும் அளவிற்கு உங்கள் நிலை மாறும். எதிர்ப்பு, வம்பு, வழக்கு என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொண்டு வருபவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் லாபம் தரும். ஜீவன காரகன் சனிபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இனி நீங்கள் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைக்கு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: மே 7.அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 18, 24, 27. மே 6, 9.பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட சங்கடங்கள் யாவும் விலகும்.

மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் லாபாதிபதி செவ்வாய் மே 10 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். இதுவரை நிறைவேறாமல் இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில் லாபம் தரும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் மோட்சக்காரகன் கேது உங்கள் நம்பிக்கையை அதிகரிப்பார். துணிச்சலுடன் செயல்பட வைப்பார். பிறரால் முடிக்க முடியாத வேலைகளையும் முடித்து அதில் ஆதாயம் காண்பீர்கள். ராசிநாதன் புதன் மே 9 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் வியாபாரிகளுக்கும், கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். கேட்ட இடத்திலிருந்து பணம் வரும். கடன் தொல்லைகள் விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பெரியோரின் ஆதரவும், துணையும் உங்களை முன்னேற்றப் பாதையில் நடைபோட வைக்கும். ஜீவனக்காரகன் சனி பகவான் ஜீவன ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் கவனமாக இருப்பது நன்மையாகும். பிறருடைய சிபாரிசுகளுக்கு இந்த நேரத்தில் இடம் கொடுக்க வேண்டாம். அதேபோல் உங்கள் அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்த வேண்டாம். அது உங்களுக்கே எதிர்மறையான பலன்களை உண்டாக்கிவிடும். வியாபாரிகள் புதிய முதலீடுகள் மேற்கொள்வதற்கு முன் மார்க்கெட் நிலவரத்தை அறிந்து செயல்படுவது அவசியம். சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் ஒரு இணக்கமான நிலை உருவாகும். குடும்பத்திற்குள் அந்நியரால் ஏற்பட்ட பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு தகுதியான வரன் வரும். சிலருக்கு கழுத்தில் மணமாலை ஏறும். இந்த மாதம் அனைத்து வகையிலும் உங்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்ணும் விரும்பிய கல்லுாரியில் இடமும் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: மே 8.அதிர்ஷ்ட நாள்: ஏப். 14, 18, 23, 27. மே 5, 9, 14.பரிகாரம்: காளத்தீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.திருவாதிரைமுயற்சியால் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் முன்னேற்றமான மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் குரு பகவானின் பார்வையுடன் சஞ்சரிக்கும் ராகு உங்கள் செல்வாக்கை அதிகரிப்பார்.  வெளிநாட்டு முயற்சிகளை சாதகமாக்குவார். பொன் பொருள் சேர்க்கையை அதிகரிப்பார். அரசியல் வாதிகள், அதிகாரத்தில் இருப்பவர்கள் கனவுகளை நனவாக்குவார். மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் சகாய ஸ்தானாதிபதி சூரியன் இதுவரை இருந்த நெருக்கடிகளில் இருந்து உங்களை விடுவிப்பார். எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய வைப்பார். தொழிலில் ஏற்பட்ட தடைகள், பிரச்னைகளை எல்லாம் இருந்த இடம் இல்லாமல் செய்வார். உங்களுக்குள் புதிய நம்பிக்கையை உருவாக்குவார். சகோதரர்கள் வழியில் ஏற்பட்ட இடைவெளியை அகற்றுவார். உத்தியோகத்தில் சந்தித்த சங்கடங்களை இல்லாமல் செய்வார். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மாற்றத்தை வழங்குவார். தொழிலில் லாபம் இல்லை, வியாபாரத்தில் முன்னேற்றம் இல்லை என்று வருத்தப்பட்டு வந்தவர்களின் கவலையை போக்குவார். கையில் பணம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் எல்லாம் விலகும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் வீட்டில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். பொன் பொருள் சேரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு பொதுத்தேர்விலும் போட்டித்தேர்வுகளிலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்விக்குரிய வழி பிறக்கும்.சந்திராஷ்டமம்: மே 8, 9.அதிர்ஷ்ட நாள்: ஏப். 14, 22, 23, மே 4, 5, 13, 14.பரிகாரம்: வடிவுடை அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சுபகாரகனான குரு சஞ்சரிப்பதால் அலைச்சல், உழைப்பு அதிகரிக்கும். தொழில், உத்தியோகத்தின் காரணமாக வெளியூரில் சென்று தங்க வேண்டிய நிலை சிலருக்கு ஏற்படும். அதனால் குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும் என்பது விதி. இருந்தாலும் குரு பகவானின் பார்வைகள் 5, 7, 9 ம் இடங்களுக்கு இக்காலத்தில் கிடைப்பதால் பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வழக்கு சாதகமாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குழந்தைக்காக ஏங்கியவர்களின் ஏக்கம் தீரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும்.  நட்பில் ஏற்பட்ட விரிசல் விலகும். கூட்டுத்தொழில் லாபம் அடையும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்டிருந்த பிரச்னை தீரும். சூழ்நிலை காரணமாக பிரிந்திருந்தவர்களும் மீண்டும் ஒன்று சேரக்கூடிய நிலை உருவாகும். சொந்த இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். உங்கள் செயல்களுக்கு விஐபிகள் ஆதரவாக இருப்பார்கள். ஆத்ம காரனான சூரியனும் லாப ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் எல்லாம் தொய்வின்றி நடந்தேறும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். வேலையில் இருப்பவர்களுக்கு மெமோ, இடைநீக்கம் என்று ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வராமல் இருந்த பணம் வரும். சேமிப்பு உயரும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். தொழிலாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஆதாயம் உண்டாகும். மாணவர்களின் முயற்சி வெற்றியடையும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: மே 9, 10.அதிர்ஷ்ட நாள்: ஏப். 14, 21, 23, 30. மே 3, 5, 12, 14.பரிகாரம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.

கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான மாதமாகும். குரு பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும் என்ற எண்ணம் வரும். சுபக்கிரகமான குரு பகவான் வீடு, மனை, வாகனம், குடும்பத்தில் விசேஷம் என்று சுபச்செலவுகளையே ஏற்படுத்துவார். அதனால் உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுவரையில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து பல்வேறு நெருக்கடிகளை உண்டாக்கி வந்த சனி பகவான் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். 12 ராசிகளில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலங்களில் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போதுதான் ஜாதகருக்கு மிகப்பெரிய யோகத்தை வழங்குவார். அதற்கு காரணம் அவருடைய பார்வைகள் 3,6,11 ம் இடங்களுக்கு உண்டாவதுதான். சனி பகவானின் பார்வை சங்கடங்களை உண்டாக்கும் என்றாலும் 3,6,11ம் இடங்களைப் பார்க்கும்போது இந்த இடங்களுக்கு யோகப் பலன்களையே வழங்குவார். இதனால்தான் 30 ஆண்டுகள் வாழ்ந்தவரும் இல்லை 30 ஆண்டுகள் கெட்டவரும் இல்லை என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். உங்களுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு யோகமான காலம் இப்போது வந்திருக்கிறது. தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நோய், நொடி, வம்பு, வழக்கு பிரச்னைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். புதிய சொத்து சேரும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு கடந்த கால நெருக்கடிகள் விலகி யோகமான நிலை ஏற்படும். பெண்களுக்கு செல்வாக்கு உயரும். மாணவர்கள் உயர் கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: மே 10.அதிர்ஷ்ட நாள்: ஏப். 20, 21, 29, 30. மே 2, 3, 11, 12.பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட நன்மைகள் நடந்தேறும்.பூசம்எடுத்த வேலைகளை முடிக்கும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். இதுவரை இருந்த மந்தநிலை மாறும். திக்குத்தெரியாத காட்டில் தவித்து வந்ததுபோல் சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு சரியான பாதைத்தெரியும். முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லை என்று சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். உங்கள் செல்வாக்கு உயரும். செய்துவருகின்ற தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். வரவேண்டிய பணம் வரும். இந்த நேரத்தில் உங்கள் தன குடும்பாதிபதியான சூரியன் ஜீவன ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால் அரசுவழி முயற்சிகள் வெற்றியாகும். கேட்பாரற்று கிடந்த உங்கள் மனு உயிர்பெறும். உங்கள் கோரிக்கைகள் வெற்றியாகும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல்வரும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பவர்களுக்கு அதற்குரிய அனுமதிகள் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். பொறுப்பு வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். செல்வாக்கோடு நடைபோடக்கூடிய நிலை உண்டாகும். மாணவர்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். படிப்புதான் வாழ்க்கையின் அடிப்படை என்ற எண்ணம் உண்டாகும். உயர்கல்வி முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: ஏப். 14. மே 10, 11.அதிர்ஷ்ட நாள்: ஏப். 17, 20, 26, 29. மே 2, 8.பரிகாரம்: பைரவரை வழிபட சங்கடங்கள் விலகும். கோரிக்கை வெற்றியடையும்.ஆயில்யம்திட்டமிட்டு செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் முன்னேற்றமான மாதமாகும். உங்கள் சகாய ஸ்தானாதிபதி புதன் பகவான் ஏப். 23 முதல் ஜீவன ஸ்தானத்தில், உச்ச சூரியனுடன் சஞ்சரிப்பதால் நீண்டநாள் கனவுகள் நனவாகும். வரவேண்டிய பணம்வரும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய சொத்து, வாகனம் வாங்கக்கூடிய அளவிற்கு சிலருக்கு வசதி வாய்ப்பு இருக்கும். விரய ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் 4,6,8 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்லக்கூடிய மனநிலை உருவாகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்ப்பு வம்பு வழக்கு என்ற நிலைகள் மாறும். உடல்நிலை சீராகும். தொழில் செய்துவரும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். மருத்துவச்செலவுகள் குறையும். ஆரோக்யம் மேம்படும். மறைக்கப்பட்ட உங்கள் செல்வாக்கு வெளிப்படும். அரசியல் வாதிகளுக்கு ஏற்பட்ட அவமானங்கள், சங்கடங்கள், இழப்புகள் எல்லாம் மாறும். மீண்டும் தொண்டர்கள் பலத்துடனும் தலைமையின் ஆதரவுடனும் செல்வாக்கோடு நடைபோடுவீர்கள். சிலர் சட்டமன்றத்திற்கும் செல்வீர்கள். ஏப். 20 முதல் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வீண் செலவுகள் குறையும். வருமானத்திற்குரிய வழிகள் தெரியும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம். கூடும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஏப். 14, 15. மே 11. 12.அதிர்ஷ்ட நாள்: ஏப். 20, 23, 29. மே 2, 5, 14.பரிகாரம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரித்து மனதில் குழப்பம், செயல்களில் பின்னடைவை ஏற்படுத்தும். அஷ்டம சனி தொழிலில் நெருக்கடி, வேலையில் பிரச்னை, உடல்நிலையில் பாதிப்பை தரும். என்றாலும் உங்கள் ராசியாதிபதி பாக்ய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால் உங்கள் திறமை வெளிப்படும். செல்வாக்கு அதிகரிக்கும். , போராட்டமான நிலை விலகும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல் வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். புதிய நம்பிக்கை பிறக்கும். உங்கள் பாக்யாதிபதி செவ்வாய் மே 10 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் விவசாயிகள் யோசித்து செயல்படுவது நன்மையளிக்கும். புதிய இடம், வீடு வாங்கும்போது சட்ட சிக்கல்கள் இருக்கிறதா என்பதைத்தெரிந்து வாங்குவது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் முடிந்தவரை குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். வார்த்தைகளிலும், பண விவகாரங்களிலும் எச்சரிக்கை அவசியம். மாணவர்களுக்கு உயர்கல்வி விருப்பம் நிறைவேறும்.சந்திராஷ்டமம்: ஏப். 15, 16. மே 12, 13.அதிர்ஷ்ட நாள்: ஏப். 19, 25, 28. மே 1, 7, 10.பரிகாரம் : தில்லை காளியை வழிபட வாழ்வில். நன்மை உண்டாகும்.பூரம்எங்கும் எதிலும் தனித்துவத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் ஏப். 20 வரை உங்கள் ஜீவனாதிபதி சுக்கிரன் சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும், பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் உங்கள் பூர்வ புண்ணியாதிபதி குருபகவான் யாமிருக்க பயமேன் என்று உங்களைப் பாதுகாப்பார். செல்வாக்கை உயர்த்துவார். பெரிய மனிதர்கள் வரிசையில் உங்களையும் நிறுத்துவார். தைரியமாகவும் தன்னம்பிக்கையாகவும் செயல்பட வைப்பார். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை தீரும். கூட்டுத்தொழில் ஆதாயம் தரும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஏழாம் இடத்திற்கு குருப்பார்வை கிடைப்பதால் திருமண வயதினருக்கு வரன் வரும் என்றாலும், புத்திக்காரகன் ஏப். 23 வரை நீச்சமாக சஞ்சரிப்பதால் நிதானமாகவும், திட்டமிட்டும் செயல்படுவது நல்லது.  அஷ்டம ஸ்தானத்தில் உங்கள் ரோகாதிபதி சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனமாக இருப்பது நன்மையை உண்டாக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் பொறுப்புடன், அதிகார வரம்பை மீறாமல் செயல்படுவதும் அவசியம். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்வி கனவு பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம்: ஏப். 16. மே 13, 14.அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 19, 24, 28. மே 1, 6, 10.பரிகாரம்: மாசாணி அம்மனை வழிபட நன்மைகள் நடக்கும். நினைத்த வேலைகள் நடந்தேறும்.உத்திரம் 1 ம் பாதம்சிந்தித்து செயலாற்றும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் தைரியமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ராசிநாதன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வருமானம் வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுகூலங்கள் உண்டாகும். உங்கள் அஷ்டமாதிபதியும், பூர்வ புண்ணியாதிபதியுமான குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ‘பணம் பந்தியிலே; குணம் குப்பையிலே’ என்பதற்கேற்ப பணவரவால் தைரியம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். எத்தனை நெருக்கடிகள் இந்த நேரத்தில் வந்தாலும் அதை உங்களால் சமாளிக்க முடியும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். ஜீவனாதிபதி புதன் மாதத்தொடக்கத்தில் நீச்சமாக சஞ்சரித்தாலும், இறுதியில் சாதகமாக சஞ்சரிப்பதால் வரவேண்டிய பணம் வரும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். கலைஞர்களின் நிலை உயரும். தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும். வயதானவர்கள் உடல்நிலையில் கூடுதல் செலுத்துவது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும், வியாபாரிகள் கொள்முதலுக்காக பணம் எடுத்துச்செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நன்மையாகும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்வது நன்மையாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: ஏப். 17. மே 14.அதிர்ஷ்ட நாள்: ஏப். 19, 28. மே 1, 10.பரிகாரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடங்கள் விலகும்.

கன்னிஉத்திரம் 2, 3, 4 ம் பாதம்நினைத்ததை முடிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் இதுவரை வெற்றிமேல் வெற்றியடைந்து வந்த உங்களுக்கு, இனி அந்த நிலை மாறும். எடுக்கும் வேலைகளில் தடையும், தாமதமும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகும். நட்பு வட்டத்தில் விரிசல் ஏற்படும். குடும்பத்திலும் கணவன், மனைவிக்குள் சிறு சிறு சச்சரவுகள் உண்டாகும். அதனால் இருவருக்கும் இடைவெளி ஏற்பட வாய்ப்பு இருப்பதால் நிதானம் காப்பது நல்லது. விரயாதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் இந்த மாதத்தில் கூடுதல் நெருக்கடிகளை ஏற்படுத்தும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் என்பது இல்லாமல் போகும். மறைமுகத் தொல்லைகள் அதிகரிக்கும். எடுத்தோம் முடித்தோம் என்று எந்தவொரு வேலையையும் முடிக்க முடியாமல் இழுபறியாகும். நன்றாக பழகி வந்தவர்களும் உங்களுக்கு எதிராக மாறக்கூடிய நிலை உருவாகும். உடலிலும் அவ்வப்போது ஏதாகிலும் சிறு சங்கடங்கள் தோன்றும் என்றாலும், சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்களைப் பாதுகாப்பார். நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுப்பார். நோய் நொடிகளில் இருந்து காப்பாற்றுவார். எதிர்ப்பு வம்பு வழக்கு என்ற நிலைகளில் வெற்றியை ஏற்படுத்துவார். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: ஏப். 17.அதிர்ஷ்ட நாள்: ஏப். 14, 19, 23, 28. மே 1, 5, 10, 14.பரிகாரம்: உலகளந்த பெருமாளை வழிபட முன்னேற்றம் உண்டாகும். சங்கடங்கள் விலகும்.அஸ்தம்எதையும் அலசி ஆராய்ந்த பிறகு செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். ஏப். 23 வரை ராசிநாதன் புதன் நீச்சம் அடைந்திருப்பதால் உங்கள் கவனம் சிதறும். எந்த ஒரு வேலையையும் திட்டமிட்டு நடத்த முடியாமல் போகும். என்றாலும் ஏப். 23 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் நிறைந்த செல்வங்களையும் நிம்மதியினையும் உங்களுக்கு வழங்குவார். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வராமல் இருந்த பணம் வரும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலை விரிவு செய்யவும், புதிய சொத்து வாங்குவதற்காகவும் வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்குவரும். சிலர் புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். குரு 10 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் வேலையில் இருப்பவர்கள் பொறுப்புடன் செயல்படுவதும், மேலதிகாரியை அனுசரித்துச் செல்வதும் நன்மையளிக்கும். குருவின் பார்வைகள் தன குடும்ப வாக்கு ஸ்தானம், சுக ஸ்தானம், சத்ரு ஜெய ஸ்தானத்திற்கு கிடைப்பதால் மலையளவு சங்கடங்கள் வந்தாலும் வந்த வழியே போய்விடும். எல்லாவற்றையும் சமாளிக்கும் நிலைஏற்படும். குடும்பப் பிரச்னைகள் விலகும். எதிர்ப்பு, வம்பு, வழக்கு என்பதெல்லாம் முடிவிற்கு வரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். இழுபறியாக இந்த வழக்கு விவகாரங்கள் முடிவிற்கு வரும். உறவினர்களுடன் இணக்கமான நிலை உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடிய நிலை ஏற்படும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். கையில் பணம் புரளும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உயர் கல்விக்குரிய வழி பிறக்கும்.சந்திராஷ்டமம்: ஏப். 18.அதிர்ஷ்ட நாள்: ஏப். 14, 20, 23, 29. மே 2, 5, 11, 14.பரிகாரம்: அர்த்தநாரீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் உண்டாகும்.சித்திரை 1, 2 ம் பாதம்சிந்தித்து செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டிய மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவானுடன், மே 10 வரை உங்கள் சகாய ஸ்தானாதிபதியும் அஷ்டமாதிபதியுமான செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுக்குள் இனம்புரியாத குழப்பத்தை ஏற்படுத்தும்.  வேலைகளில் தாமதம் ஏற்படும். தவறானவர்களின் அறிமுகம் ஏற்பட்டு அவர்கள் காட்டும் வழியில் சென்று சிலருக்கு சட்ட சிக்கல்களும் ஏற்படும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்பட்டு நல்ல நட்புகளையும் இழக்க வேண்டிவரும். வாழ்க்கைத் துணையுடனும் சண்டை சச்சரவு அதிகரிக்கும். மே 10 முதல் செவ்வாய் அஷ்ட ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் நிலையில், உங்கள் ராசிக்கு விரயாதிபதியான சூரியனும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அனைத்திலும் கவனமாக செயல்படுவது அவசியம்.  யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம், சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபட வேண்டாம். இந்த இக்கட்டான நேரத்தில் தன குடும்பாதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால், எத்தனை நெருக்கடி வந்தாலும் வசதி வாய்ப்புகள் உண்டாகும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். அரசியல்வாதிகள் தடாலடியாக செயல்பட்டு உங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள முயற்சிப்பீர்கள். அதனால் சில சங்கடங்களும் ஏற்படும் என்றாலும், யோகக்காரகன் ராகு சத்ரு, ஜெய ஸ்தானத்தில், குரு பார்வையுடன் சஞ்சரிப்பதால் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பதுபோல் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்னையிலும் ஒரு நன்மையும் இருக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். ராசிநாதன் புதன் ஏப். 23 முதல் சாதகமாக சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் கூடும். தொழில் முன்னேற்றம் அடையும். மாணவர்களுக்கு எதிர்காலம், மேற்கல்வி பற்றிய எண்ணம் உருவாகும்.சந்திராஷ்டமம்: ஏப். 19.அதிர்ஷ்ட நாள்: ஏப். 14, 18, 23, 27. மே 5, 9, 14.பரிகாரம்: அனுமனை வழிபட சங்கடங்கள் நீங்கும். நன்மை உண்டாகும்.

துலாம்சித்திரை 3, 4 ம் பாதம்உழைப்பையே மூலதனமாக கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான மாதமாகும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் மே 10 வரை சஞ்சரிக்கும் தைரிய வீரிய காரகனான செவ்வாய் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவார். மற்றவரால் செய்ய முடியாத வேலைகளை செய்து அதில் லாபம் அடைவீர்கள். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தொண்டர்களின் பலம் கூடும். எதிர்பார்த்த பணம்வரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பொருளாதார நெருக்கடியால் கடனுக்கு மேல் கடன் வாங்கி வந்த நிலை மாறும். கடன்களை அடைக்கும் அளவிற்கு கையில் பணம் புழங்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் கர்மக்காரகன் சனி பகவானும் சஞ்சரிப்பதால் பார்க்கும் வேலைகளில் நிதானம் வேண்டும். ஒரு பக்கம் வேகமாக செயல்பட நினைத்தாலும் மறுபக்கம் அதில் ஏதேனும் ஒரு தடை ஏற்படும். எனவே திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வியாபாரிகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர் கல்விக்குரிய வழி பிறக்கும்.சந்திராஷ்டமம்: ஏப். 19.அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 18, 24, 27. மே 6, 9.பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட குறைகள் விலகும். நன்மைகள் நடக்கும்.சுவாதிஎடுத்த வேலைகளை எப்பாடுபட்டாவது முடிக்கும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் முன்னேற்றமான மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் யோகக்காரகன் ராகு சஞ்சரித்து மனதில் குழப்பம், செயல்களில் தடை, குடும்பத்தில் நெருக்கடி, குழந்தைகளால் பிரச்னைகளை உண்டாக்கி வந்தாலும், பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கும், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் கிடைப்பதால் கடந்தகால நெருக்கடிகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன்வரும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய சொத்து, வீடு, வாகனம் வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும் என்றாலும், சப்தம ஸ்தானத்தில் ஏப். 20 வரை சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்ப்பாலினர் விஷயத்தில் ஓரடி விலகி இருப்பது நன்மையை ஏற்படுத்தும். வாழ்க்கை துணையின் ஆலோசனைகள் இந்த நேரத்தில் உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில் பிரச்னைகள் இல்லாத நிலை உருவாகும். பாக்யாதிபதி புதன் ஏப். 23 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கும் வாய்ப்பு வரும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றமான நிலை இருக்கும்.சந்திராஷ்டமம்: ஏப். 20.அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 22, மே 4, 5, 13, 14.பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். சங்கடங்கள் விலகும்.விருச்சிகம் 1, 2, 3 ம் பாதம்சுய முன்னேற்றத்தில் அக்கறையாக செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் இதுவரை இருந்த போராட்டங்களுக்கு முடிவு கட்டுவார். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து என்ற பாதையைக் காட்டுவார். பல்வேறு சங்கடங்களை சந்தித்து வாழ்க்கையின் கடைசி எல்லைவரை சென்றிருக்கும் உங்களுக்கு இக்காலம் யோகமான காலமாகும். தொழிலாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லை, குடும்பத்திலும் நிம்மதியில்லை என்றிருந்த நிலைமாறும். பொருளாதார நிலை உயரும். மற்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்திடக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். பணியாளர்கள் உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். இதுவரை பல வகையில் முயற்சித்தும் கை கூடி வராத வேலைகள் இனி உங்கள் எண்ணப்படி முடிவிற்கு வரும்.  சகோதரர்கள் ஒத்துழைப்பும், பிள்ளைகளால் பெருமையும் உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு நிம்மதியான நிலை ஏற்படும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். புதிய சொத்து வீடு என்று வாங்குவீர்கள். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். விவசாயம் எதிர்பார்த்த லாபம் தரும். முதியவர்களுக்கு ஏற்பட்ட நலிவு நீங்கும். ஆரோக்கியமாக நடைபோட முடியும். மாணவர்களின் கனவு நனவாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஏப். 21.அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 24, 30. மே 3, 6, 12.பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் வெற்றி உண்டாகும்.................

விருச்சிகம்விசாகம் 4 ம் பாதம்சூழ்நிலைகளை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செயல்களில் குழப்பம் ஏற்படும். தேவையற்ற வேலைகளில் ஈடுபட்டு அதனால் சங்கடங்கள் அடையவேண்டிய நிலை உருவாகும் என்றாலும், அவருடைய பார்வைகள் 12, 2, 4 ம் இடங்களுக்கு கிடைப்பதால், விரய செலவுகள் கட்டுப்படும். வெளியூர் பயணங்கள் வழியாக ஆதாயம் ஏற்படும். நிம்மதியான துாக்கம் இருக்கும்.  குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்க முடியும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். மனதில் இருந்த குழப்பம் விலகும். சந்தோஷமான நிலை இருக்கும். சுக ஸ்தானத்திற்கு குரு பகவான் பார்வை இருப்பதால் தாய்வழி உறவுகளின் ஆதரவு உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். பொருளாதார நிலை உயரும். செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். தொழிலை விரிவு செய்ய எதிர்பார்த்த பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும். பெண்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குழந்தைகள், குடும்பத்தின் நலனிலும் அக்கறை அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படும் என்றாலும் அனைத்திலும் திட்டமிட்டு செயல்படுவதும் நிதானமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பதும் நன்மையாகும்.சந்திராஷ்டமம்: ஏப். 21.அதிர்ஷ்ட நாள்: ஏப்.18, 27, 30. மே 3, 9, 12.பரிகாரம்: மாரியம்மனை வழிபட எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.அனுஷம்கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், சப்தம, லாப, குடும்ப ஸ்தானங்களைப் பார்ப்பதால், கூட்டுத்தொழிலில் கூடுதல் கவனம் தேவை. கூட்டாளியிடம் கணக்கு கேட்கப்போய் அதனால் நட்பில் விரிசலும் ஏற்படலாம். புதியவர்களை நம்பி சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடங்களுக்கு ஆளாகலாம். இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மையை உண்டாக்கும். முடிந்தவரை தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்துச்செல்வதால் சங்கடங்கள் விலகும். இளம் பெண்கள் இந்த நேரத்தில் எதிர்பாலினர் நட்பில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சுயதொழில் செய்பவர்களுக்கு வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம்வரும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் நடந்தேறும். முதலீட்டிற்கேற்ற ஆதாயம் ஏற்படும். முடங்கிக்கிடந்த தொழில்கள் மீண்டும் முன்னேற்றம் அடையும். வெளியில் நின்று போன பணம் கைக்குவரும். சனிப்பார்வை ராசியை விட்டு விலகி விட்டதால் பணியாளர்களுக்கு உடல்நிலையும் மனநிலையும் சீராகும். மே 10 முதல் ராசிநாதன் செவ்வாய் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களிடம் ஒரு அசாத்தியமான துணிச்சல் ஏற்படும். தைரியம் கூடும். எடுத்த வேலைகளை முடிக்க முடியும். எதிர்ப்பு வம்பு வழக்கு என்ற நிலையெல்லாம் முடிவிற்குவரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தை குருபகவான் பார்ப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வார்த்தைகளில் தெளிவு இருக்கும். எதிர்பார்த்த பணம்வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு வரும். சிலருக்கு உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற ஆதாயம் வரும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும்.சந்திராஷ்டமம்: ஏப். 22.அதிர்ஷ்ட நாள்: ஏப். 17, 18, 26, 29. மே 8, 9.பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சங்கடங்கள் விலகும்.கேட்டைதிட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் நன்மையான மாதமாகும். ஏப். 23 முதல் உங்கள் ராசிக்கு லாபாதிபதியான புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரிகள்,  கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். மாதம் முழுவதும் உங்கள் ஜீவனாதிபதி சூரியன் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னைகள், சட்ட சிக்கல்கள் முடிவிற்குவரும். எடுக்கும். முயற்சிகள் வெற்றியாகும். உங்களை எதிர்த்து செயல்பட்டோரின் நிலை மாறும். உங்களிடமே சமாதானம் பேசுவதற்கு வருவர். வம்பு வழக்கு என்று சங்கடப்பட்டு வந்த நிலைகளிலும் மாற்றம் உண்டாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். மருத்துவ செலவுகள் குறையும். இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். ராசிநாதன் செவ்வாய் மே 10 முதல் நெருப்பு ராசியான மேஷத்தில் ஆட்சி பெறுவதால் உங்கள் திறமை வெளிப்படும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிக்க முடியும். கடன் தொல்லைகள் விலகும். அரசியல் வாதிகளுக்கு நீண்டநாள் கனவு நனவாகும். தேர்தல் களத்தில் செல்வாக்கு மிக்கவராக நடைபோடுவீர்கள். சிலருக்கு புதிய சொத்து வாகனம் என்ற கனவு நனவாகும். மாணவர்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஏப். 23.அதிர்ஷ்ட நாள்: ஏப். 14, 18, 23. மே 5, 9, 14.பரிகாரம்: நரசிம்மரை வழிபட நன்மைகள் உண்டாகும். சங்கடங்கள் விலகும்.

தனுசுமூலம்தைரியமும், தெய்வ நம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு, தன குடும்பாதிபதியும் சகாய ஸ்தானாதிபதியுமான சனி பகவான் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், இதுவரை சுமூகமாக நடைபெற்று வந்த வேலைகளில் தடை ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளுகூடும். தாயாரின் உடல்நிலையில் சங்கடங்கள், தாய்வழி உறவுகளுடன் பகை என்று ஏற்படுவதுடன், வீடு வாகனம் வகையில் செலவுகள் ஏற்படும் என்றாலும், சகாய ஸ்தானத்தில் குருப்பார்வையுடன் சஞ்சரிக்கும் ராகுவால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். உழைப்பாளர்களின் மரியாதை அதிகரிக்கும். தேவைக்கேற்ற பணம்வரும். தொழிலில் வேலையாட்களால் பிரச்னை, எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கவில்லை என்ற நிலையெல்லாம் விலகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். விலகிச்சென்ற நண்பர்கள் மீண்டும் உங்களைத் தேடிவருவர். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். கூட்டுத்தொழில் ஆதாயமடையும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலர் மணமேடையிலும் ஏறுவீர்கள். மே 9 முதல் உங்கள் ஜீவனாதிபதி புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வரவேண்டிய பணம்வரும். வங்கியில் கேட்ட கடன் கிடைக்கும். புதிய இடம் வீடு என்ற கனவு நனவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைப்பதுடன் தொண்டர்களின் பலமும் கூடும். மாணவர்களுக்கு உயர் கல்வி கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: ஏப். 23, 24.அதிர்ஷ்ட நாள்: ஏப். 16, 21, 25, 30. மே 3, 5, 12, 14.பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.பூராடம்பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் ராசிநாதன் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசி, மற்றும் லாப, சகாய ஸ்தானங்களையும் பார்ப்பதால் இதுவரையில் இருந்த சங்கடங்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தைக்கேற்ப எடுக்கும் வேலையெல்லாம் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரம்.  எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு உயரும். புதிய சொத்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடிவரும். திருமண வயதினருக்கு வரன் வரும். பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் உங்களைத் தேடிவருவர். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிவு ஏற்பட்டு டைவர்ஸ் கேட்டு நீதிமன்றம்வரை சென்றவர்களும் பெரியோர் அறிவுரைகளால் மீண்டும் சேர்ந்து வாழக்கூடிய நிலை உருவாகும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும்.  புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும், மனதில் நிம்மதியான நிலை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை ஏற்படும்.சந்திராஷ்டமம்: ஏப். 24, 25.அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 21, 30. மே 3, 6, 12.பரிகாரம்: கந்தனை வழிபட காரியம் கைகூடும். நன்மைகள் நடக்கும்.உத்திராடம் 1 ம் பாதம்எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு முன்னேறி வரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் முயற்சியால் முன்னேற்றம் காணும் மாதமாக இருக்கும். உங்கள் பாக்யாதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். வேலைத்தேடி வருபவர்களுக்கு  எதிர்பார்த்த தகவல் வரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும்.  பெரியோரின் ஆதரவால் நீங்கள் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பிள்ளைகளால்  பெருமை உண்டாகும். ஏப். 20 வரை உங்கள் லாபாதிபதி சுக்கிரன் சாதமாக சஞ்சரிப்பதால் உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியமாகவும் பகட்டாகவும் நடைபோடுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நவீன பொருட்கள் சேரும். தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்படுவதால் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். சேமிப்பு அதிகரிக்கும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 9 முதல் புதன் என்று உங்கள் வாழ்க்கையில் நன்மைக்குமேல் நன்மைகளை ஏற்படுத்துவர். பிறரை நம்பி செயல்பட்டு வந்தநிலை மாறும். உங்கள் தனித்தன்மை வெளிப்படும். நீண்டகால முயற்சிகள் வெற்றியாகும். உயர் கல்வி, வேலை, திருமணம், சொந்த வீடு,  பட்டம், பதவி என்ற அவரவரின் கனவுகள் நனவாகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: ஏப். 26.அதிர்ஷ்ட நாள்: ஏப். 19, 21, 28, 30. மே 1, 3, 10, 12.பரிகாரம்: அமிர்தகடேஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

மகரம்உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்நினைத்ததை சாதிப்பதற்காக தொடர்ந்து போராடிவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான மாதமாகும். ஆத்ம காரகனும் உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியுமான சூரியன், சுக ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அனைத்திலும் போராட்டமான நிலை இருக்கும் என்றாலும், உங்களுக்கு சுகம் மற்றும் லாப ஸ்தானங்களுக்கு அதிபதியான செவ்வாய் மே 10 வரை சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலைகளை முடிக்க முடியும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். தயங்கி தயங்கி ஒவ்வொரு வேலையிலும் ஈடுபட்டு பின்னடைவை சந்தித்து வந்த நிலைமாறும். பொருளாதார நிலை உயரும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் பலம் கூடும். நீண்டநாள் கனவுகள் இப்போது நனவாகும். சொந்த வீடு, வியாபாரம் செய்வதற்கு சொந்த இடம் என்று உங்கள் நிலை உயரும். பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். நம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிக்க முடியும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும் என்றாலும், அஷ்டம ஸ்தானத்தில் கேது, சத்ரு ரோக ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகளும் தொல்லைகளும் இருக்கும். உடல் நிலையிலும் அவ்வப்போது ஏதாகிலும் பிரச்னைகள் தலைக்காட்டும் என்பதால் அனைத்திலும் நிதானமாக இருப்பது நல்லது. விவசாயிகளுக்கு ஆதாயம் கூடும். மாணவர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: ஏப். 26.அதிர்ஷ்ட நாள்: ஏப். 17, 19, 28. மே 1, 8, 10.பரிகாரம்: திருபுல்லாணி ஆதி ஜெகந்நாதரை வழிபட வேண்டிய காரியம் நடந்தேறும்.திருவோணம்உயர்வை நோக்கி நடைபோட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் நன்மையான மாதமாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் சனி பகவானால் போராட்டங்கள், யாவும் முடிவிற்குவரும். தொடர்ந்து ஒவ்வொன்றிலும் தடைகளையே சந்தித்து வந்தவர்கள் இனி சாதித்துக் காட்டுவீர்கள். ராஜநடை போடுவீர்கள். கடந்தகால அனுபவங்களை எல்லாம் படிப்பினையாக கொண்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கையில் எதுவெல்லாம் உங்கள் கனவாகவும் லட்சியமாகவும் இருந்ததோ அவையெல்லாம் இனி நனவாக ஆரம்பிக்கும். உங்களை அலட்சியமாக பார்த்தவர்களும், ஏளனம் செய்தவர்களும், கடுமையாக விமர்சித்தவர்களும் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் நிலை உயரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். தேவையான ஆர்டர் கிடைக்காமல், பணியாளர்கள் இல்லாமல் மூடப்பட்ட தொழிற்கூடங்கள் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும். பொது வாழ்க்கையிலும், அரசியலிலும் ஈடுபட்டுள்ளவர்களின் செல்வாக்கு உயரும். ஏப். 23 முதல் உங்கள் பாக்யாதிபதி புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆதரவால் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கிடைக்கும். சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வதுபோல் உங்கள் செயல்பாடுகள் இருக்கும். புதிய சொத்து, வாகனம் என்ற கனவு நனவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் விலகும். உயர் கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: ஏப். 26, 27.அதிர்ஷ்ட நாள்: ஏப். 17, 20, 29. மே 2, 8, 11.பரிகாரம்: அர்த்தநாரீசுவரரை வழிபட வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.அவிட்டம் 1, 2 ம் பாதம்முயற்சியில் தடையை சந்தித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் முன்னேற்றமான மாதமாகும். மே 10 வரை உங்கள் ராசிக்கு லாபாதிபதியான செவ்வாய் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எந்தவொரு வேலையிலும் துணிச்சலாக ஈடுபட்டு அதில் வெற்றி அடைய முடியும். இதுவரை இழுபறியாக இருந்த வேலைகள் எல்லாம் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குடும்பத்திலும் சந்தோஷமான நிலை இருக்கும். ஏப். 20 முதல் உங்கள் ஜீவனாதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். பொன் பொருள் ஆடை ஆபரணம் என்ற கனவு நனவாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். சகாய ஸ்தானாதிபதி குரு, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் ஜீவன, விரய, குடும்ப ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். விரய செலவுகள் குறையும். வெளியூர் பயணங்கள் வழியே ஆதாயம் ஏற்படும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நீண்ட நாள் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பம் விலகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். உழைப்பின் காரணமாகவும், பொறுப்பு அதிகரிப்பதாலும் உடலில் சிறு சிறு பாதிப்புகள் வந்து போகும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மையாகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் கூடும்.சந்திராஷ்டமம்: ஏப். 27.அதிர்ஷ்ட நாள்: ஏப். 17, 18, 26. மே 8, 9.பரிகாரம்: தேவிபட்டினம் நவபாஷான நவகிரகங்களை வழிபட வாழ்வில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.

கும்பம்அவிட்டம் 3, 4 ம் பாதம்தவிட்டுப் பானையையும் தங்கமாக்கிடும் வல்லமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். உங்கள் சகாய, ஜீவன ஸ்தானாதிபதி செவ்வாய் மே 10 வரை, தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் உங்கள் ராசிநாதன் சனி பகவானுடன் சஞ்சரிப்பதால் எந்த ஒன்றையும் நினைத்தபடி நடத்திக்கொள்ள முடியாமல் போகும். குடும்பத்தில் ஏதேனும் ஒரு பிரச்னை இருந்து கொண்டே இருக்கும் என்றாலும், சகாய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் நிலையை மாற்றுவார். சாதாரணமாக இருந்தவர்களையும் உச்ச நிலைக்கு கொண்டு செல்வார். உங்கள் ராசியை விட்டு சனி பகவான் விலகி இருப்பதே உங்களுக்கு ஆதாயத்தை ஏற்படுத்தும். மந்த நிலையை மாற்றும். பயந்து பயந்து வாழ்ந்த நிலை இனி மாறும். சட்ட சிக்கல்கள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். தனித்துவம் வெளிப்படும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை உண்டாகும். பிள்ளைகளால் பெருமைப்படக்கூடிய அளவிற்கு அவர்களுடைய செயல்பாடுகள் இருக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை மாறும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஏப். 28.அதிர்ஷ்ட நாள்: ஏப். 17, 18, 27. மே 8, 9.பரிகாரம்: ஸ்ரீசிவசைலநாதரை வழிபட வாழ்வில் இருந்த சங்கடங்கள் விலகும்.சதயம்தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டு முன்னேறும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான மாதமாகும். ஜென்ம ராசிக்கும், ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகுவிற்கும் குரு பகவானின் பார்வை உண்டாவதால், நீண்டகால கனவுகள் நனவாகும். பெரிய திட்டங்கள் தீட்டி அதை முடிக்க முடியாமல் தவித்துவந்த நிலை மாறும். எதிர்ப்புகள் மறைமுகத் தொல்லைகள் என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு அந்த நிலையில் மாற்றம் ஏற்படும். அரசியல்வாதிகள், பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு தேர்தல் போட்டியிடவும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். வேலைக்காக வெளிநாடு சென்றவர்களுக்கு மனதில் நிம்மதி உண்டாகும். சிலர் சொந்த ஊரை நோக்கி வருவீர்கள். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு பணியாளர்களாலும் அந்நியராலும்  ஆதாயம் கூடும். மாதம் முழுவதும் உங்கள் சுக, பாக்ய ஸ்தானாதிபதி சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். நவீன பொருட்கள் சேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் உண்டாகும். பொதுத்தேர்வு முடிவுகள் மனதில் நிம்மதியை உண்டாக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: ஏப். 28, 29.அதிர்ஷ்ட நாள்: ஏப். 17, 22, 26. மே 4, 8, 13.பரிகாரம்: ஸ்ரீஅகோரமூர்த்தியை வழிபட அல்லல்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்வாழ்க்கையின் அர்த்தத்தை முழுவதுமாக தெரிந்து வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் நன்மையான மாதமாகும்.குருப் பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை இந்த மாதத்தில் நீங்கள் உணருவீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் கனவை நனவாக்குவார். இதுவரை இழுபறியாக இருந்த வேலைகளை முடிக்கும் அளவிற்கு சூழ்நிலைகள் சாதகமாகும். குருவின் பார்வைகள் உங்கள் ராசி, பாக்யம், லாப ஸ்தானங்களுக்கு கிடைப்பதால், இதுவரை மற்றவர்கள் பார்வைக்கு கேள்விக்குறியாக இருந்த நீங்கள் இனி ஆச்சரியக்குறியாக மாறுவீர்கள். இருக்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய சொத்து சேரும். பெரியோரின் ஆதரவு சேமிப்பு உயரும்.  தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். உற்பத்தி அதிகரிப்பதுடன் விற்பனையும் கூடும். பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். குடும்பத்திலும் இந்த நேரத்தில் நிம்மதி இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் தேடிவரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணத்திற்குரிய வாய்ப்புகள் உருவாகும். சிலருக்கு புதிய வீட்டில் பால் காய்ச்சும் நிலையும் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். மாணவர்களுக்கு விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஏப். 29, 30.அதிர்ஷ்ட நாள்: ஏப். 17, 21, 26. மே 3, 8, 12.பரிகாரம்: வெங்கடாஜலபதியை வழிபட வாழ்வில் நன்மைகள் உண்டாகும். வேண்டுதல் நிறைவேறும்.

மீனம்பூரட்டாதி 4 ம் பாதம்சுய கவுரவத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்காத உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ராசிக்குள் கர்மக்காரகன் சனி பகவான் ஜென்ம சனியாக சஞ்சரிப்பதுடன், மே 10 வரை உங்கள் தன குடும்பாதிபதியான செவ்வாயும் ராசிக்குள் சஞ்சரிக்கிறார். இதனால் முயற்சிகளில் ஏதேனும் ஒரு தடை ஏற்படும். என்னதான் திட்டம் தீட்டினாலும் அதை முடிக்க முடியாமல் போகும். எதனால் இந்த நிலை? நன்றாகத்தானே எல்லாம் போய்க்கொண்டிருந்தது என்று யோசிக்கும் அளவிற்கு நெருக்கடி அதிகரிக்கும். ஆனாலும் மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எல்லாவற்றையும் சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்கள். பொன் பொருள் வாகனம் என்ற கனவு நனவாகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். உங்கள் நிலையறிந்து குருநாதர்போல் ஆலோசனைகள் கூறி வழிநடத்துவார். ராசிநாதன் குருவின் பார்வைகள், அஷ்டம, ஜீவன, விரய ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் உடல்நிலை சீராகும். மறைமுகத் தொல்லைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் கூடும். செலவுகள் கட்டுப்படும். மாணவர்களுக்கு பொது, போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஏப். 30அதிர்ஷ்ட நாள்: ஏப். 21. மே 3, 12.பரிகாரம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.உத்திரட்டாதிநினைத்ததை சாதிக்க வேண்டும் என வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் நட்சத்திராதிபதி ராசிக்குள், ஜென்ம சனியாக சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானம் அவசியம். களத்திர ஸ்தானத்திற்கு சனி பகவானின் பார்வை ஏற்படுகிறது. இதனால் வாழ்க்கைத்துணைக்கும் உங்களுக்கும் சண்டை, சச்சரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அனுசரித்துச் செல்வது நன்மையாகும். புதிய நட்புகள் உங்களது பலவீனங்களை அறிந்து உங்களை அவர்களுடைய வழியில் கொண்டு செல்ல வாய்ப்பு இருக்கிறது. எனவே அவர்களை ஓரடி விலக்கி வைப்பது நல்லது. சத்ரு ஜெய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது சஞ்சரிப்பதால் எத்தனை பிரச்னை வந்தாலும் அவற்றை சமாளிப்பீர்கள். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். தொழில் ரீதியாக ஏற்பட்ட போட்டி இருந்த இடம் தெரியாமல் போகும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரங்கள் சாதகமாகும் என்றாலும், குடும்பத்தினர் செயல்பாடு சங்கடத்தை ஏற்படுத்தும். அதனால் உங்கள் வார்த்தைகள் நெருப்பாக இருக்கும். அதன் வழியே குடும்பத்திற்குள் சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிப்பதால் பேச்சில் நிதானம் தேவை. மே 10 முதல் தன குடும்பாதிபதி செவ்வாய் தன குடும்ப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்வதுடன் புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் இருக்கும் வீட்டை சரி செய்வீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். குரு பகவானின் பார்வை தொழில் ஸ்தானத்திற்கு கிடைப்பதால் உத்தியோகத்தில் நிம்மதியான நிலை இருக்கும். தொழில் லாபம் தரும். மாணவர்களின் உயர் கல்வி கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: மே 1.அதிர்ஷ்ட நாள்: ஏப். 17, 21, 26, 30. மே 3, 8, 12.பரிகாரம்: திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.ரேவதிவாழ்வில் ஒவ்வொரு படியாக முன்னேறிவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோசித்து செயல்பட வேண்டிய மாதமாகும். ஏப். 23 வரை புத்தி காரகன் புதன் உங்கள் ராசிக்குள் நீச்சம் அடைந்திருப்பதால் யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு அதனால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். இந்த சமயத்தில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு வேலைகளிலும் கூடுதல் கவனம் தேவை. ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நன்றாகப் படித்துப் பார்ப்பது நன்மையாகும். புதிய இடம் வீடு வாங்குபவர்கள் அதில் வில்லங்கம் இருக்கிறதா என்பதை நன்றாக தெரிந்து கொண்டு அதன் பிறகு முயற்சிக்கலாம். ராசிக்குள் சனி பகவானும், மே 10 வரை செவ்வாயும்  சஞ்சரிப்பதால் கண்ணைக் கட்டி காற்றில் விட்டதுபோல் உங்கள் நிலை இருக்கும். எந்த முயற்சியை மேற்கொள்வது? எப்படி சமாளிப்பது என்றெல்லாம் யோசிப்பீர்கள் என்றாலும், இந்த நேரத்தில் உங்கள் ராசிநாதன் குரு பகவானின் பார்வைகள் உங்களுக்கு சாதகத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்கும். வியாபாரம் தொழிலில் லாபத்தை அதிகரிக்கும். உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்தும். புதிய இடம் வீடு வாகனம் என்று சுபச் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். என்றாலும் வாக்கு ஸ்தானத்தில் சூரியன் உச்சமாக சஞ்சரிப்பதால் வாக்குறுதிகள் வழங்குவதற்கு முன் நன்றாக யோசித்து வழங்கவும். பண விவகாரத்தில் எப்போதும் கவனமாக இருக்கவும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வதால் நன்மை அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பின்மீது கவனம் கூடும்.சந்திராஷ்டமம்: மே 2.அதிர்ஷ்ட நாள்: ஏப். 14, 21, 23, 30. மே 3, 5, 12, 14.பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட அல்லல்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us